என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிராமங்களில் இரவில் தடுப்பூசி செலுத்தும் பணி- மருத்துவக்குழுவினர் நடவடிக்கை
உப்பிலியபுரம்:
கொரோனாவை தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர முயற்சியால் தற்போது தொற்று பரவல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழக அரசு வாரந் தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி வருவதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு போதிய விழிப்புணர்வு மூலம் தற்போது தாமாக முன்வந்து செலுத்திக்கொள்ளும் அளவுக்கு வந்துள்ளனர்.
அதேபோல் வயது முதிர்ந்தோர்களின் வீடு தேடி சென்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியரம் வட்டாரம், பச்சமலையில் டாப்செங்காட்டுப் பட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் பகல் நேரத்தில் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு சரியான முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியவில்லை.
எனவே மாலை நேரத்தில் வேலைக்குச் சென்றவர் திரும்பி வீட்டில் இருக்கும் போது, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி டாப்செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சம்பத் குமார், உதவி மருத்துவர்கள் தீபக், ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையில், மருந்தாளுநர் செந்தில் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூக கிராம மேம்பாட்டு அமைப்பினர் கொண்ட 10 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
அவர்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை டாப்செங்காட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 8 கிராமங்களில் 400 வீடுகளுக்கு நேரில் சென்று 205 பேருக்கு முதலாவது மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மேலும் இதுவரை போட்டுக் கொள்ளாதவர்களின் பெயர் விவரங்களை சேகரித்தனர். பழங்குடியின மக்களிடையே கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இரவு நேரங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படியுங்கள்... கொரோனா அதிகரிப்பு - நியூயார்க்கில் முக கவசம் கட்டாயம்