என் மலர்
உள்ளூர் செய்திகள்
பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
கிருஷ்ணா தண்ணீர் வரத்து மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பெய்த கன மழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
இதனால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
கன மழை கொட்டிய போது அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 40 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்துள்ளது. சென்னை நகர மக்களின் ஒரு வருட குடிநீர் தேவை 12 டி.எம்.சி. என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. ஏரிக்கு 161 கனஅடி மட்டும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு 3 மாதத்துக்கு பிறகு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
தற்போது நீர் மட்டம் 34.85 அடி உள்ளது. ஏரியில் இருந்து இணைப்புகள் வழியாக விநாடிக்கு 390 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதே போல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கன அடி தண்ணீர் பேபி கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது.