என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
உக்ரைனில் தவிக்கும் அனைத்து மாணவர்களையும் மீட்கக்கோரி மனு
Byமாலை மலர்27 Feb 2022 2:36 PM IST (Updated: 27 Feb 2022 2:36 PM IST)
உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து மாணவர்களையும் மீட்க வேண்டும் என டெல்லி சிறப்பு பிரதிநிதியிடம் உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் ஊருக்கு திரும்பியுள்ள தஞ்சை மாணவர் கோரிக்கை மனு வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகன் ஆர். விபிலியாண்டர் (வயது 22). இவர் உக்ரைன் நாட்டில் 5-ம் வருட மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் மீண்டும் படிப்பிற்காக உக்ரைன் செல்ல முடிவு செய்து அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தான் ரஷ்யா திடீரென உக்ரைன் நாட்டில் போர் தொடுத்தது. இதனால் மாணவர் விபிலியாண்டர் உக்ரைன் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க தொடர்ந்து உக்ரைன் நாட்டில் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதால் தம்முடன் படித்த தமிழக மாணவர்கள், இந்திய மாணவர்கள் அங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசித்து வருவதால் அதனை எண்ணி விபிலியாண்டர் மனவேதனை அடைந்தார்.
தினமும் உக்ரைனில் இருக்கும் தனது நண்பர்களுடன் செல்போனில் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். கவலைப்படாமல் இருங்கள். மத்திய, மாநில அரசுகள் சிறப்பு விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வருகின்றனர் என கூறினார். தொடர்ந்து அவர்களிடம் பேசியபடி ஆறுதல்
கூறி வருகிறார்.
இந்த நிலையில் மாணவர் ஆர்.விபிலியாண்டர் திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் உள்ள தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் லுகான்ஸ் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி, கார்க்கீவ், திரிப்ரோ, கீவ் பகுதிகளில் அங்கே மருத்துவ பயிலும் மாணவர்கள் மற்றும் இந்திய பணியாளர்கள் உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக போர் நடந்து கொண்டிருக்கும் லுகான்ஸ், ருபேசினி பகுதிகளில் தமிழக மாணவர்கள் 50 பேர் உள்பட இந்திய மாணவர்கள் 200 பேர் இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் இடத்தில் தான் ரஷ்யா குண்டுகளை வீசிவருகிறது.
வெடிகுண்டு சத்தத்துக்கு இடையே ஒரு அசாதாரண பாதுகாப்பற்ற நிலையில் பரிதவித்து இருக்கின்றனர். சரிவர உணவு கிடைப்பதில்லை. வெளியே கடைகளுக்கும் செல்ல முடியாது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இயல்பு நிலை மிக மோசமாக காணப்படுகிறது.
அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து எல்லைக்கு வர வேண்டுமானால் 1600 கி.மீ-. கடந்து தான் வர வேண்டும். ஆனால் அதற்கும் சாத்தியமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.
ஏனென்றால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையே தெரியாத அளவுக்கு குண்டுகள் வீசி தகர்த்தப்பட்டுள்ளது. இதனால் எல்லைக்கு அவர்களால் வர முடியாது.
உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் இருக்கின்றனர். இதற்கிடையே பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் பஸ்களில் தங்களது நாட்டு கொடி கட்டி இந்த பகுதிக்கு வந்து தங்களது நாட்டு மாணவர்களை அழைத்து கொண்டு எல்லைக்கு சென்று வருகின்றனர்.
இதனால் அந்த 2 நாட்டு மாணவர்களும் படிப்படியாக தாயகம் திரும்பி வருகின்றனர். அதேப்போல் இந்திய மாணவர்களை மீட்க போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்கு இந்திய அரசு பஸ்களில் மாணவர்களை எல்லை வரை அழைத்து செல்ல வேண்டும். அப்படி செய்தால் தான் பாதுகாப்பாக விமானத்தில் இந்தியா திரும்ப முடியும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேப்போல் உக்ரைனில் சிக்கி தவிக்கும் அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உடனடியாக டெல்லியில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் போனில் பேசி நிலைமையை எடுத்து கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
மேலும் செல்போனில் இருந்து உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் பேசி தைரியப்படுத்தினார். உங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என நம்பிக்கை அளித்தார். உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உங்களுக்கு எந்த நேரத்திலும் எந்த உதவி தேவைப்பட்டாலும் உடனே எனது தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் கூறினார்.
Next Story
×
X