என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் பேரூராட்சி பழங்குடி பெண் கவுன்சிலரை அழைத்து பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அஸ்வினி என்ற நரிக்குறவ பெண்ணுக்கு அன்னதானம் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கோவிலுக்கு நேரில் சென்று அஸ்வினியுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.
பின்னர் அவரிடம் அப்பகுதி கோரிக்கைகளை கேட்டறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து தீபாவளி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர்கள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாமல்லபுரம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதிக்கு நேரில் சென்று நலத்திட்டங்களை வழங்கினார்.
இதனால் நரிக்குறவர்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதி பிரபலமானது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
மாமல்லபுரம் பேரூராட்சி, பூஞ்சேரி 10-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த மஞ்சு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தி.மு.க வேட்பாளரை விட 135 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.
இதற்கிடையே அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த மஞ்சுவை அழைத்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் கூறி பாராட்டினார்.
இதனை கண்டு கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இது குறித்து கவுன்சிலர் மஞ்சு கூறும்போது:-
எனக்கு முதன் முறையாக கிடைத்த இந்த பாராட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எடப்பாடி பழனிசாமியை நேரில் பார்த்ததும் அவர் எனக்கு வாழ்த்து கூறியதும் ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னை நேரில் அழைத்து பாராட்டுவார் என்று நினைக்கவில்லை.
அவரது பாதுகாப்பு கார்கள் வரும் போது எனது கால்கள் நடுங்கியது., எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் நினைத்துக் கொண்டு தைரியமாக கூட்டத்தில் நின்றேன் என்றார்.
இதையும் படியுங்கள்... தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதிய பாடத்திட்டம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு