என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல்: ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.
சென்னை, திருத்தணி அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில்நிலையம் 4 கி.மீ., தூரத்தில் உள்ளதால், பெரும்பாலான பயணிகள் ஆட்டோக்கள் மற்றும் பஸ்களில் பயணம் செய்து ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர்.
திருவள்ளூர் நகரில் உள்ள சுமார் 650 ஆட்டோ டிரைவர்களில் பெரும் பாலானவர்கள் ரெயில் பயணிகளை நம்பியே தொழில் செய்கின்றனர்.
ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 120 ஆட்டோக்கள் மட்டுமே இயங்க அனுமதி இருந்தது. ஆனாலும் கட்டுப்பாடுகளை மீறி ரெயில் நிலையத்திற்கு வெளியே 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
இதனால், ரெயில் நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. கடந்த சில மாதங்களாக ரெயில் நிலைய வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் வழியை மறித்து ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தது. இதையடுத்து திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி, போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் ரெயில் நிலைய பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். மேலும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாகனத்தின் ஆவணம் மற்றும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை போலீஸ் நிலையத்தில் கொடுத்து அனுமதி பெற்று திருவள்ளூர் நகர்ப்புற பகுதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.