என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே ரூ.1.40 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- பெற்றோர் உள்பட 5 பேர் கைது
நெல்லை:
நெல்லை மாவட்டம் உவரி அண்ணா நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தங்க செல்வி. விஜயன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
தங்கசெல்வி, அதே பகுதியை சேர்ந்த அர்ஜூனன் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் கர்ப்பம் அடைந்த அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்ததால், தற்போது பிறந்த பெண் குழந்தையை அவர்கள் 2 பேரும் விற்க முடிவு செய்தனர்.
இதற்காக கூட்டப்பனை சுனாமி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மாரியப்பன் மூலம் கேரளாவில் வசிக்கும் திசையன்விளை அருகே உள்ள கடக்குளத்தை சேர்ந்த செல்வகுமார்சந்தன வின்சியா தம்பதிக்கு குழந்தையை ரூ.1.40 லட்சத்துக்கு விற்றனர்.
இந்நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், செல்வக்குமார் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது டாக்டர்கள் விபரங்களை கேட்டபோது, குழந்தையை விலை கொடுத்து வாங்கியது தெரியவந்தது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த நன்னடத்தை அலுவலர், நெல்லை மாவட்ட குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் சர்ச்சில் என்பவரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து தங்கசெல்வி, செல்வக்குமார், சந்தனவின்சியா, மாரியப்பன் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தார்.
தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு ஆலங்குளத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்க செல்வியின் கணவர் அர்ஜூனன் இந்த சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் பிடிபட்டார். அவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.