என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
- யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
- தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை, சுவாமி வீதிஉலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினத்தன்று (13-ந்தேதி) காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
பின்னர், 14-ந்தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரியும், இரவு அவளோ அவரோஹணம் படிச்சட்டத்தில் சுவாமி புறப்பாடும், 15-ந்தேதி இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவிலின் இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
- 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.
திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 2 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் அண்ணாமலையார் என பக்தர்களால் அழைக்கப்படும் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.
அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அதுமட்டுமின்றி அத்துடன் பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன
அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது.
இந்த மண் சரிவில் புதைந்து 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர்களின் உடல்களை கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். அது காண்போர் அனைவரின் கண்களையும் கலங்க செய்தது.
இந்நிலையில் மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி அஞ்சலி செலுத்தினர்.
7 பேரின் உடலை பார்த்து அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார். உயிரிழந்த 7 பேரின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
- சங்கி என்றால் தமிழில் நண்பன் என்று பொருள் வருகிறது.
- எல்லா மாநில முதலமைச்சர் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு வருது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
ரஜினி எப்படி சங்கியானார்... பா.ஜ.க.வின் தலைவரா இல்ல அமைச்சரா இல்ல... அவர் சொன்னாரா நான் ஆர்.எஸ்.எஸ்.னு. இந்த நாட்டிலேயே மிக உயர்ந்த சூப்பர் ஸ்டார் ஒருத்தர் இருக்கார். எங்க ஐயா நல்லக்கண்ணு. எங்களுக்கு அப்பா போல. அவரும் நானும் நாலு மணி நேரம் உட்கார்ந்து பேசினோம். அதற்கான காணொலியும் இருக்கு படமும் இருக்கு. ஒரே போராட்டத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து போராடினது இருக்கு. அந்த சந்திப்பை எல்லாம் ஏதோ அரசியல் பேசி இருக்கார்கள் ஏதோ அதெல்லாம் நீங்க பேசலையே...
உண்மையிலேயே துளசிதாசர் அந்த ராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்க்கும் போது ராமனுடைய நண்பன் அனுமான்னு சொல்றதுக்கு சங்கிங்கிற வார்த்தைய பயன்படுத்தி இருக்கார். சங்கி என்றால் தமிழில் நண்பன் என்று பொருள் வருகிறது. திராவிடன் என்றால் என்ன பொருள் வருகிறது?
தம்பி விஜயும் மோடியும் சந்தித்தார்கள். ஏன் நீங்க அவர சங்கின்னு சொல்லல.
எல்லா மாநில முதலமைச்சர் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு வருது. ஜார்க்கண்ட் முதலமைச்சர், அரவிந்த் கெஜ்ரிவால், மீது அமலாக்கத்துறை ரெய்டு வருது. இந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது எந்த ரெய்டும் வர மாட்டேங்குது ஏன்?
சமத்துவம், சமூக நீதி எல்லாம் வெற்று வார்த்தை. நடந்த ஒரு உண்மையே சொன்னா உடனே அதிமுகவுக்கு ஆதரவா இருக்கீங்களா.. உடனே மாறுபாடுகிறார் , வேறுபடுகிறார் என்று ஏதாவது சொல்வது...
கொள்கையில் முரண் உள்ளது. அண்ணன்- தம்பி பாசம் வேறு.. அரசியலுக்கு வருவது வேறு. சேவை செய்யுங்க.. வேணும்னா செய்யுங்க. இப்ப எங்க ஐயோ விஜயகாந்தோட நாங்க முரண்பட்டோமா.. ஊழலை ஒழிக்கிறேன். வறுமையை ஒழிக்கிறேன் என்று சொன்னார். முடிஞ்சி போச்சு..
இவ்வாறு அவர் பேசினார்.
- விவசாயிகளுக்கு முதலீட்டை கணக்கிட்டால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் சரியல்ல.
- வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக, முழுமையாக காலத்தே வழங்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ரூ. 2,000, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5,00,000, சேதம் அடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, 33 சதவீதம் அல்லது அதற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு ரூ. 37,500 என நிவாரணத் தொகையை அறிவித்திருப்பது போதுமானதல்ல. காரணம் கடன் வாங்கி விவசாயம் செய்த, கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு முதலீட்டை கணக்கிட்டால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் சரியல்ல.
எனவே தமிழக அரசு மழை வெள்ள புயல் பாதிப்பால் மிகவும் சிரமத்தில் இருக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக, முழுமையாக காலத்தே வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
- உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
கோவை:
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் இருவேலம்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்தபடி பேசி உள்ளார்.
கோபம் அடைந்த மக்கள் காரை விட்டு இறங்கி வர மாட்டீர்களா என கூறி அவர் மீது சேற்றை வீசி உள்ளனர்.
நிர்வாக திறனற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க. அரசால் பெருமழை பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்குச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இதனால் தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகால தி.மு.க. அரசுக்கு மக்கள் வழங்கிய சான்றிதழ் தான் இந்த சம்பவம்.
இனியாவது அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் மக்களை மதிக்க வேண்டும். உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் இந்த கோபம், 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
- நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 7,414 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 9,246 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று இரவு 29,021 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.
மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 32,240 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நேற்று 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 113.39 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும் நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,040-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ. 7,130-க்கும் ரூ. 57,040-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் ஐந்தாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040
02-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
01-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
30-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-12-2024- ஒரு கிராம் ரூ. 100
02-12-2024- ஒரு கிராம் ரூ. 100
01-12-2024- ஒரு கிராம் ரூ. 100
30-11-2024- ஒரு கிராம் ரூ. 100
29-11-2024- ஒரு கிராம் ரூ. 100
28-11-2024- ஒரு கிராம் ரூ. 98
- திமுக பொறுப்பேற்று 1505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
- எதிர்க்கட்சித்தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார்.
திமுக ஆட்சியில் கட்டிய பாலங்கள் எவ்வளவு தரமற்றவை என்பதற்கு அடித்துச்செல்லப்பட்ட பாலங்கள் சாட்சி என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக பொறுப்பேற்று 1505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 328 பாலப்பணிகள் நடைபெறுகிறது.
* அதிமுக ஆட்சியில் முடிக்காது நீண்ட நாள் நிலுவையிலிருந்த 38 ரெயில்வே மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.
* எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு.
* அதிமுக ஆட்சியில் கடலூர் சிங்காரத்தோப்பு பாலம் கட்டும்போதே இடிந்து விழுந்தது.
* எதிர்க்கட்சித்தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார் என்று கூறினார்.
- கிராம மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
- 2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 1-ந்தேதி இரவு மலட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் கரையோரம் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் இரவுக்கு மேல்தான் வெள்ளம் வடிய தொடங்கியது.
நேற்று காலை வரை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் அதிகாாிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்த அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர், அரசூர் கூட்டுசாலையில் துண்டிக்கப்பட்ட இடம், இருவேல்பட்டு குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை நோில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில், கடலூர் - புதுச்சேரி - சென்னை சாலையில் பல இடங்களில் தென்பெண்ணை ஆற்று நீர் சாலைக்கு மேல் சென்றதால் நேற்று முன்தினம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி, வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இன்று இயல்பு நிலை திரும்பியது.
- அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
- 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வருகிற 13-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
வருகிற 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் 13-ந்தேதி ஏற்றப்படுகிறது.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
13-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் மெரினா கடற்கரை, மக்களை கவரும் வகையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் பொழுதுபோக்க வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பல ஆயிரம் பேர் இங்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய இந்த கடற்கரைக்கு இன்னமும் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலையில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சர்வீஸ் சாலையில் நின்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்