என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளத்தில் மூழ்கி கிடக்கும் கார்.
குளத்தில் கார் மூழ்கி 4 பேர் பலி
- சாமி தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர்.
- கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
திருவாரூர்:
சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 71). இவரது மனைவி பானுமதி (67). கணேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்களது மகன் சாமிநாதன் (37), அவரது மனைவி லெட்சுமி (35). சாமிநாதன் சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார்.
சாமிநாதன் குழந்தை லட்சுமி நாராயணன் (வயது 1) ஆகியோர் சென்னையில் இருந்து திருவாரூரில் உள்ள குலதெய்வ கோவிலிலுக்கு காரில் வந்துள்ளனர்.
தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை சாமிநாதன் ஒட்டி வந்துள்ளார். அப்போது விசலூர் என்கிற இடத்தில் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கும், நன்னிலம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்த போதும் கணேசன், பானுமதி, சாமிநாதன், ஒரு வயது குழந்தையான லட்சுமிநாராயணன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
லட்சுமி மட்டும் உயிருடன் இருந்த நிலையில் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நன்னிலம் காவல் –துறையினர் உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்–துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.