என் மலர்
உள்ளூர் செய்திகள்
தமிழகம் முழுவதும் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் 7 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படுகிறது- அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
- 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்
- 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் பூலுவபட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழக வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் முறையானபடி கிடைக்கி றதா? பண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அம்சங்கள் சரியானபடி கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நெசவாளர் கண்காட்சி விற்பனை கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்றேன்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதி இலங்கை வாழ் மக்கள் மீது தனி கவனம் செலுத்தி னார். மேலும் அகதிகள் முகாம் என்று கூறாமல், மறுவாழ்வு முகாம் என்று அழைக்க வலியுறுத்தினார். அந்த வகையில் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு அவர்க ளின் தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை.
கடந்தஆண்டு முதல் கட்டமாக 3500 வீடுகளும், 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகளும், மொத்தத்தில் 7000 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதேபோல கோவை பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் 320 குடும்பங்கள் உள்ளன, இந்த பகுதியில் இடத்திற்கு தகுந்தாற்போல 280 வீடுகள் கட்டப்பட உள்ளது.
அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் உதவிகள் சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளிலும் பொருட்கள் தவறாமல் வழங்குகிறார்கள். மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் சரியாக கிடைக்கி றதா? என நேரிடையாக சென்று ஆய்வு செய்து வரும்படி உத்தரவிட்டார்.
அதன்படி இங்கு வந்துள்ளேன். இந்த பகுதியில் 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த முகாமில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை கோரி விண்ணப்பம் செய்யுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது 3 கப்பல்களில், 172 கோடி மதிப்பீட்டில் மருந்து மற்றும் உணவு பொருட்களை இலங்கைக்கு அனுப்பி உதவி செய்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, சாமிபிள்ளை மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.