என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் போலீஸ் நிலையம் அருகே சுற்றி திரியும் கரடி
- கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் காணப்படுகிறது.
- பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வன விலங்குகள் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி முக்கிய நகர பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி ஒன்று உலா வருவதாகவும், அந்த கரடி இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபடும் ஊர் காவல் படையினர் மற்றும் பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் புகார்கள் எழுந்தது. ஆனால் தற்போது கோத்தகிரி போலீஸ் நிலையம் அருகிலேயே அந்த கரடி உலா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு நேரம் பணியில் இருந்த காவலர்கள் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அங்கு கரடி ஒன்று நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு கரடியை பார்த்து கூச்சலிடவே அந்த கரடி அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று மறைந்தது. போலீஸ் நிலையம் அருகில் கரடி சுற்றி திரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.