என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரடி சேதப்படுத்திய வாழைகள்.
களக்காடு அருகே விவசாய தோட்டங்களில் உலா வரும் கரடி-விவசாயிகள் அச்சம்

- 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.
- கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
களக்காடு:
களக்காடு அருகே மஞ்சுவிளை பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றி திரிகிறது. மேலும் கரடி வாழைகளையும் நாசம் செய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் 20-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.
இந்த வாழைகள் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயிகள் ஜேம்ஸ், பால்ராஜ் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே வாழை தோட்டங்களுக்குள் உலா வந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும், கரடிகள் நாசம் செய்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சமீபகாலமாக காட்டுப்பன்றி, கடமான், கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.