என் மலர்
உள்ளூர் செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது
- கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்மநபர் ஒருவர் செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.
- வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தேவார பாடல் பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.
நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஆனதால் எப்படியும் அந்த மர்ம நபரை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவிலில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்தார்.
உடனே வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருச்சி உறையூரை சேர்ந்த ஆனந்தன் (வயது 35).
என்பதும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அதை அடுத்து போலீசார் ஆனந்தனை கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.