என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை
- சமீபத்தில் 2 பேரை கொன்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.
- ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 பேரை ஊருக்குள் புகுந்து காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் காட்டு யானையை பிடிக்க கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் 2 பேரை கொன்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் ஆரோட்டுப்பாறை மக்கள் அச்சமடைந்தனர் இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில் வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையில் வனவர்கள் சுதீர் குமார், வீரமணி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நியூ ஹோப் போலீஸ் நிலையம் பகுதியில் ந காட்டு யானை முகாமிட்டது. பின்னர் இரவு, பகலாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு ஊருக்குள் வராத வகையில் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
நேற்று பல்வேறு கட்ட நடவடிக்கைக்கு பிறகு பச்சக்காடு வழியாக டெலோவுஸ் வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்டினர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சந்தன மலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா உள்பட பல்வேறு கோவில்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.