என் மலர்
உள்ளூர் செய்திகள்
கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாதசுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம்-நாளை தவசு திருவிழா நடைபெறுகிறது
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை முன்னிட்டு ஆவணித் தவசு திருவிழா நடைபெறவில்லை.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆவணி தவசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
தேரோட்டம்
விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை முன்னிட்டு ஆவணித் தவசு திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ந்தேதி ஒப்பனையம்மாள் கோவில் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.
நேற்று காலை 8 மணிக்கு அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் தனுஷ் குமார் எம்.பி., சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராசையா என்ற ராஜா, கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6 மணிக்கு நிலையத்திலிருந்து புறப்பட்ட தேர் நான்கு ரதவீதியில் வழியாக வலம் வந்து நிலையத்தை வந்தடைந்தது.
பாதுகாப்புக்கான ஏற்பாடு–களை சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் சுதீர் தலைமையில் கரிவலம்வ–ந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சங்கரன்கோவில் சிகர நிகழ்ச்சியான ஆவணி தவசு திருவிழா 13-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் பணியாளர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.