search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 14 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
    X

    கூட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் விஷ்ணு வழங்கிய காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் 14 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

    • நெல்லை மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.80 மில்லிமீட்டர். தற்பொழுது அக்டோபர் 27-ந் தேதி வரை 416.4 மி.மீ பெறப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 34.5 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெடர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.80 மில்லிமீட்டர். தற்பொழுது அக்டோபர் 27-ந் தேதி வரை 416.4 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இம்மாதம் வரை பெறக்கூடிய இயல்பான மழையளவான 495 மி.மீ ஐ விட 15.87 குறைவாக பெறப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டத்தில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 34.5 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 48.41 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நெல் 10,077 எக்டேர் பரப்பளவிலும், சிறு தானியங்கள் 166 எக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 1260 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 625 எக்டேர் பரப்பளவிலும், கரும்பு 24 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 148 எக்டேர் பரப்பளவிலும், என மொத்தம் 12,300 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு அடிப்படை இடுபொரு ட்களான உரம் மற்றும் விதை தங்கு தடையின்றி தரமானதாக கிடைத்திட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் உயர்தர ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலபடுத்தும் வகையில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காட்சி நடைபெற்றது.

    மாநில அரசின் முதன்மை திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 56 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் 12 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. வேளாண் பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 சதவீத மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 56 கிராம பஞ்சாயத்துகளிலேயே செயல்படுத்தப்பட உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 264 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. மேற்காணும் விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு இம்மாதம் வரை 974 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இவற்றுள் 824 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 16 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டு, 14 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 50,3291 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைத்தடை விதிக்கப் பட்டது. இதன் மதிப்பு ரூ.69,78594 லட்சம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாவட்ட வன அலுவலர் முருகன் , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் அழகிரி, வேளாண்மை துணை இயக்குநர் டேவிட் டென்னிசன், நேர்முக உதவியாளர் சுபசெல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×