என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த நடவடிக்கை
- சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் ஆய்வு செய்தார்.
- ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீப நாட்களாக ஏற்காடு, சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக திகழ்ந்து வருகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில் அடிப்படைத் தேவைகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகளை மேம்படுத்திடவும், குறிப்பாக குப்பைகளை முறையாகக் கையாளவும், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, ஏற்காட்டில் குப்பைகளை முறையாக கையாளுதல் குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தால் செயல்பட்டுவரும் பயோ மீத்தேன் கேஸ், பிளாஸ்டிக் மறு சுழற்சி மையத்தின் மூலம் ஏற்காட்டில் உள்ள உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மீத உணவுகள், ஏற்காட்டில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை மறுசுழற்சி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை தெருக்களில் வீசி எறியாத வகையில் தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து அவற்றை அவ்வப்போது சேகரித்திடவும், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் ஊராட்சி ஒன்றிய தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு, குப்பைகளைச் சேகரித்திடவும், இதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், அலங்காரா ஏரியை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ளவும் என ஏற்காட்டை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுதவிர, ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இந்த ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 8 பணிகளும், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் 17 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 50 பணிகளும், 15-வது மத்திய நிதிக்குழு (கிராம ஊராட்சி) சார்பில் 50 பணிகளும், பழங்குடியினர் மேம்பாட்டிற்கென அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக 4 பணிகள் என மொத்தம் 158 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவிப் பொறியாளர்கள் பூபதி, சதீஷ், பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.