என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி
- அறிவுசார் மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அலுவலக கட்டிடமே பூங்கா இடத்தில் தான் உள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட மணி நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மேட்டுப்பாளையம் நகர பகுதி மாணவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள தாசம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியின் எதிரே இதற்கு முன் தொடக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்த கட்டிடங்கள் பழுதடைந்ததால் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தற்போது காலி இடமாக உள்ளது. தற்போது இந்த இடத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் அறிவு சார் மையம் அமைக்க ஏற்கனவே நகரசபை கூட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஏற்கனவே கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கனவே அப்பள்ளியில் இட நெருக்கடி உள்ளது. எனவே போதுமான வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. மணிநகர் பள்ளியை எதிர்காலத்தில் மாணவர்கள் நலன் கருதி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட வேண்டும். அப்படி தரம் உயர்த்தும் போது இடப்பற்றாக்குறை ஏற்படும். எனவே அறிவு சார் மையத்தை அதே வார்டில் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கூறி வந்தனர்.
இந்தநிலையில் நகராட்சி அதிகாரிகள், அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்களிடம் கோவை ஆர்.டி.ஓ. பூமா, தாசில்தார் மாலதி ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சார்பில் காண்பித்த இடம் பூங்கா இடமாக உள்ளது.
இதனால் அப்பகுதியில் அறிவுசார் மையம் அமைக்க முடியாது. எனவே இப்பள்ளியின் முன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே இம்மையம் அமைக்க முடியும் என அதிகாரிகள் கூறினர்.
அப்போது நகராட்சி அலுவலக கட்டிடமே பூங்கா இடத்தில் தான் உள்ளது. மேலும் இப்பகுதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தொடங்கினால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ. பூமா மாவட்ட கலெக்டரிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பின் பேசுவதாக கூறி அங்கிருந்து சென்றார்.