என் மலர்
உள்ளூர் செய்திகள்
டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
- நாளை திருக்கார்த்திகை நாள் என்பதால் கோவில்களுக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவதால் பழனி முருகன் கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ரெயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து திண்டுக்கல் வழியாக கடந்து செல்லும் ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருவதோடு அவர்கள் கொண்டு செல்லும் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர்.
சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தென்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் மசூதிகள் முன்பும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை திருக்கார்த்திகை நாள் என்பதால் கோவில்களுக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள்.
எனவே முக்கிய கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்ப டுகின்றனர். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தற்போது தொடர் மழையினால் சுற்றுலா பயணிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இருந்தபோதும் அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.