என் மலர்
உள்ளூர் செய்திகள்
கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்- அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவு
- ஒரு பெண் உள்பட 7 மாணவிகள் கெடிலம் ஆற்றில் தடுப்பணையில் மூழ்கி பலியானார்கள்.
- 7 பேர் இறந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் உடனடியாக தன்னை சம்பவ இடத்திற்கு அனுப்பியதை யொட்டி தான் நேரில் வந்து பார்த்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தேன்.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அருங்குணம் ஊராட்சி குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 7 மாணவிகள் கெடிலம் ஆற்றில் தடுப்பணையில் மூழ்கி பலியானார்கள். இத்தகவலினை அறிந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவருடைய சொந்த நிதி ஆதாரத்திலிருந்து தலா ரூ.25,000 - வீதம் 7 பேர் குடும்பதாரர்களிடம் ரூ.1,75,000- வழங்கினார்.
அதன்பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
7 பேர் இறந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் உடனடியாக தன்னை சம்பவ இடத்திற்கு அனுப்பியதை யொட்டி தான் நேரில் வந்து பார்த்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தேன். மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இந்த விசாரணையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் பள்ளம் எப்படி ஏற்பட்டது மேலும் அங்குள்ள மண்ணின் தன்மை என்ன என்பதெல்லாம் குறித்து ஆய்வின் முடிவில் தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.