என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்தை அண்ணாமலை சந்தித்து நிதி உதவி
- குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கிய அண்ணாமலை.
- தமிழ்நாட்டில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு நன்றாகவே உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டியில் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் பிரபு வீட்டிற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வந்தார். அவர் பிரபுவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பிரபுவின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கிய அண்ணாமலை பிரபுவின் குழந்தைகளின் கல்வி செலவுகளை பா.ஜனதா ஏற்கும் என கூறினார். அப்போது பிரபுவின் மனைவி தனது கணவரை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும். தனது கணவர் நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அண்ணாமலையிடம் முன் வைத்தார்.
இதன் பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியை சேர்ந்த பிரபு ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதே போல அவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி ரூ.5 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். இது சாதாரண தகராறில் நடந்த கொலை அல்ல. இறந்து போனவர் ராணுவ வீரர். அவரை கொலை செய்த குற்றத்தில் கைதானவர்களில் ஒருவர் ஆளுங்கட்சி கவுன்சிலர். மற்றொருவர் அவரது மகன் போலீஸ்காரர்.
கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரவு நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று அவரது மனைவி கூறி இருக்கிறார். இது நியாயமான கோரிக்கை. ராணுவ வீரர் கொலை வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவில்லை.
பின்னர் அவர் இறந்த பிறகு கொலை வழக்காக ஆன பிறகு, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகே, இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி ஆளுங்கட்சி கவுன்சிலர், 2&வது குற்றவாளி அவரது மகன் சென்னை மாநகர போலீஸ்காரர் என்பதால் காவல் துறை தயக்கம் காட்டினார்களா? என தெரியவில்லை.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு நன்றாகவே உள்ளது. இதை யாரும் தவறாக திரித்து கூற வேண்டாம் என்று கூறினார்.