search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா
    X

    கோவையில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா

    • பேச்சுப்போட்டிக்கு தகுதி சுற்று நடக்கிறது
    • போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்-கேடயம்


    கோவை,

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் நா.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தி.மு.க. மாநில பொறியாளர் அணி சார்பில் பேச்சுப்போட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட (சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிகள்) பொறியியல், ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தகுதிச்சுற்று போட்டி வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவை புதுசித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள சி.ஆர்.ஐ. அறக்கட்டளை ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.

    இதனை கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக், தி.மு.க. பொறியாளர் அணி மாநில செயலாளர் எஸ்.கே.பி. கருணா, பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதில், வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.5 ஆயிரம், 3-வது பரிசு ரூ.3 ஆயிரம் என ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. இதன்மூலம், தனியார் டி.வி. சேனல்களில் நடக்கும் பட்டி மன்றங்களில் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

    இந்த தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இறுதி சுற்றில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 2 லட்சமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்படுகிறது.

    எனவே, கோவை மாநகரில் உள்ள பொறியியல், ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×