என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் பட்டப்பகலில் வீட்டின் கூரையை பிரித்து பணம் திருட்டு- பொதுமக்கள் விரட்டியபோது மர்ம நபர் தப்பி ஓட்டம்
- பூட்டிய வீட்டிற்குள்ளே யாரோ இருப்பது போல் சத்தம் கேட்டுள்ளது.
- அந்த மர்ம நபரோ வயல் காட்டு பகுதிக்குள் சென்று தப்பிவிட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்துவிளை குரூஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் (வயது 45). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மதியம் அவர்கள் வீடு திரும்பி உள்ளனர். அப்போது பூட்டிய வீட்டிற்குள்ளே யாரோ இருப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் செல்வம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அதே வேளையில் வீட்டின் பின் வாசல் வழியாக வெளியே வந்த ஒரு மர்ம நபர் காம்பவுண்ட் சுவரில் ஏறி தப்பி ஓடினார். உடனே செல்வம் உள்ளிட்டோர் அந்த நபரை துரத்திச் சென்றனர். ஆனால் அந்த மர்ம நபரோ வயல் காட்டு பகுதிக்குள் சென்று தப்பிவிட்டார்.
அந்த நபர் வீட்டின் சமையலறை ஓட்டுக்கூரையை பிரித்து உள்ளே சென்று பீரோவை உடைத்து ரூ.3 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. இது பற்றி செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.