என் மலர்
உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணம் ஆற்று பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி
- புகார் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சிய போக்கால் விட்டுவிடுகின்றனர்.
- பாலத்தின் மீது இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துக்கள் தினமும் நடைபெற்று வருகிறது.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் தினமும் சொந்த வேலையாகவும், அரசு வேலையாகவும் கிருஷ்ணகிரிக்கு தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது சென்று வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றின் மீது பாலத்தில் உள்ள மின் விளக்குகள் டியூப் லைட்டுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு டியூப் லைட் கூட எரிவதில்லை.
பாலத்தின் மீது லைட் எரிவது இல்லை என புகார் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சிய போக்கால் விட்டுவிடுகின்றனர். இதனால் பாலத்தின் மீது இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துக்கள் தினமும் நடைபெற்று வருகிறது. இதேபோல காவேரிப்பட்டணம் -சேலம் மெயின் ரோட்டில் உள்ள காவல் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் மின் விளக்குகள் சரியான முறையில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் மீது டியூப்லைட்கள் உள்ளன. இதில் வருகிற வெளிச்சம் போதுமானதாக இல்லை. மேலும் மின் விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இதனால் ஆற்றுப்பாலத்தில் தினமும் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் மீது உள்ள டியூப் லைட்டுகளை மாற்றிவிட்டு எல்.இ.டி. பல்புகளை மாற்றினால் ஆற்றுப்பாலத்தில் நல்ல வெளிச்சமாக இருக்கும்.
இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் பாலத்தில் மீது உள்ள ரோடுகள் பெயர்ந்து விட்டதால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன. இதை உடனடியாக சரி செய்து வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.