search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியை அடுத்த பன்னப்பள்ளியில்     கி.பி.910-ம் நூற்றாண்டு நுளம்பர் காலத்து  கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு
    X

    கிருஷ்ணகிரியை அடுத்த பன்னப்பள்ளியில் கி.பி.910-ம் நூற்றாண்டு நுளம்பர் காலத்து கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு

    • விளை நிலத்தில் ‘நிலவுக்கல்’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கி.பி.9-10ஆம் நூற்றாண்டு நுளம்பர் காலத்து கன்னட கல்வெட்டைக் கண்டறிந்தனர்.
    • எதிர்த்து போரிட்ட அன்னிகன் என்ற வீர நுளம்ப மன்னனின் படைவீரர்களின் ஒருவரான பாலையா என்ற போர் வீரர் வீர மரணமடைந்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள், தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்ட போது, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னப்பள்ளி கிராமத்தில், ஊருக்கு வடக்குப்புறம் உள்ள விளை நிலத்தில் 'நிலவுக்கல்' என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கி.பி.9-10ஆம் நூற்றாண்டு நுளம்பர் காலத்து கன்னட கல்வெட்டைக் கண்டறிந்தனர்.

    இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரச மரபினர்களின் காலத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட மொழி கல்வெட்டுகள், நடுகற்கள், நடுகல் கல்வெட்டுகள் இங்கு அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது பன்னப்பள்ளி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு கி.பி. 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நுளம்பர் மன்னன் வீரா நுளம்பன் என்று அழைக்கப்படும் அன்னிகன் என்ற மன்னனின் காலத்து கன்னட மொழி நடுகல் கல்வெட்டு ஆகும்.

    இந்த நடுகல் கல்வெட்டில், ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன் என்ற மூன்றாம் கிருஷ்ணனின் படைத்தளபதியான அரகெல்லா என்பவர் இப்பகுதியில் படையெடுத்தபோது, அவருடன் எதிர்த்து போரிட்ட அன்னிகன் என்ற வீர நுளம்ப மன்னனின் படைவீரர்களின் ஒருவரான பாலையா என்ற போர் வீரர் வீர மரணமடைந்துள்ளார்.

    அவ்வாறு போரில் வீர மரணமடைந்த பாலையாவுக்கு அன்னிகன் என்ற வீர நுளம்பன், அவ்வீரனின் வீரத்தைப் போற்றி நிலம் தானமாக கொடுத்துள்ளான் என்ற செய்தியை இந்த நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் போரில் வீரமரணம் அடைந்த பாலையாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர் வீரத்தையும், அரசன் கொடுத்த நில தானத்தையும் போற்றும் வகையில் இந்த நடுகல்லை எடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது குறித்து டெல்லி, மத்திய தொல்லியல் துறை, கல்வெட்டுதுறை இயக்குனர் முனைவர் முனிரத்தினம் ரெட்டி கூறுகையில், இக்கன்னட நடுகல் கல்வெட்டு 9-10ம் நூற்றாண்டில் இப்பகுதியில் நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றை அறிய முடிகிறது. மேலும் இந்த நடுகல் கல்வெட்டு மூலம் தமிழ்நாட்டில் சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டதாகவும் கருத முடிகிறது என்றார்.

    Next Story
    ×