என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்வாய் தண்ணீர் பச்சை நிறமாக மாறியது- கழிவு நீர் கலப்பதாக குற்றச்சாட்டு

- துர்நாற்றம் வீசும் தண்ணீரால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
- கழிவு தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் சி.எம்.எஸ் நகரில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் வரத்து கால்வாய் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் இந்த நீர் வரத்து கால்வாயை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகலப்படுத்தி தண்ணீரை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தினர்.
இந்த நிலையில் தற்போது இந்த கால்வாயில் கழிவு நீர் கலந்து உள்ளதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. தண்ணீரின் மேல் பகுதி முழுவதும் பாசிப்படர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு கொசு மற்றும் புழு பூச்சிகள் அதிக அளவில் உற்பத்தி ஆகி வருகின்றன.
தண்ணீர் வெளியேற வழியில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதனை ஒட்டி உள்ள தாலுகா காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, தனியார் கடைகள், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் வழியாக வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அருகில் குடியிருக்கும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
துர்நாற்றம் வீசும் தண்ணீரால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.