என் மலர்
உள்ளூர் செய்திகள்
கணியூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு ரத்து
- ஒருவழி கட்டணமாக ரூ.330 செலுத்த வேண்டி இருப்பதால் விவசாயிகள் வேதனை
- மத்தியஅரசு அறிவித்த தகுதியான நபர்களுக்கு மட்டும் விலக்கு என அதிகாரிகள் அறிவிப்பு
சூலூர்,
சூலூர் அருகே அவிநாசி சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. இங்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களுக்கு விவசாய பணிகளுக்காக கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கணியூர் சுங்கச்சாவடியில் கடந்த 1-ந்தேதி முதல் கட்டண விலக்கு நிறுத்தப்பட்டது.
எனவே சுங்கச்சாவடி வழியாக செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த பகு தியில் வசிப்பவர்கள் கூறுகையில், சூலூர் அருகே அவினாசி சாலை கணியூர் பகுதியில் தனியார் நிறுவனத்தினர் சுங்கச்சாவடி அமைத்து அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இதற்கு எதிராக நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு போராட்டம் நடத்தினோம். அப்போது 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொது மக்களுக்கு கட்டண விலக்கு தருவதாக சுங்கசாவடி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் அவர்கள் திடீரென அவ்வழியே செல்லும் விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களிடம் பணம் கேட்டு வருகின்றனர். இதனால் நாங்கள் அந்த பகுதியை கடக்க ஒருவழி கட்டணமாக ரூ.330 செலுத்த வேண்டி உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறுகையில், மத்தியஅரசு அறிவித்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மற்றவர்கள் இவ்வழியை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர்.