search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் இன்று சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா
    X

    ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர், மரகதாம்பாள் மற்றும் விநாயகருக்கு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தபோது எடுத்த படம்.

    ஓசூரில் இன்று சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா

    • பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வர சாமி மலைக்கோவில் தேரோட்ட விழா, இன்று நடைபெற்றது..

    விழாவை யொட்டி, கடந்த 28-ந் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று வரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில், நாள்தோறும் இரவு சிறப்பு பூஜைகளும் மற்றும் சிம்ம வாகனம், மயில்வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்சவங்கள், புஷ்ப அலங்காரங்கள் நடைபெற்றது.நேற்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் நிகழ்ச்சியாக, இன்று காலை 10.50 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் , ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு ஆகியோர் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா " என்று பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர். மேலும், உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா,பல்வேறு துறை அரசு அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். இதில், ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள், மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், , மாநகராட்சி கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) இரவு தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெறுகிறது. மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ,விழாவையொட்டி ஒசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×