search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருளர் பகுதியில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் திடீர் ஆய்வு: குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை

    • குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தையும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
    • யாரேனும் குழந்தை திருமணம் செய்வது தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் ஐந்துகாணி பகுதியில் பல ஆண்டுகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாய கூலி வேலை மற்றும் மரம்வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருளர் இன குடும்பங்களில் உள்ளவர்கள் யாரும் பெரும்பாலும் படித்ததில்லை. இப்போது தான் முதல்முறையாக இங்கு உள்ள குழந்தைகளில் 4 பேர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். ஒரு பெண் மட்டும் பன்னிரண்டாவது படித்து வருகிறார். இவர்கள் பெரும்பாலும் வீடு அருகில் உள்ள காரைதிட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 4 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பிறகு மேல் படிப்புக்காக வேறு பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர்.

    இதன் காரணத்தை அறியவும் மேலும் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தையும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுத உள்ள தேவி என்ற பெண்ணை அழைத்து படித்து என்னவாக விரும்புகிறாய்? என மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கேட்டதற்கு அந்த பெண் வங்கி மேலாளர் ஆகப்போவதாக தெரிவித்தார். உடனடியாக அந்த மாணவியை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அதைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரி சங்கீதா பேசும்போது, திருமண வயதை அடையும் முன்பே குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்தார். அப்படி யாரேனும் குழந்தை திருமணம் செய்வது தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

    Next Story
    ×