என் மலர்
உள்ளூர் செய்திகள்
உலகமயமாக்கப்பட்ட சமூக சூழலை கருத்தில் கொண்டு புதிய கற்றல், கற்பித்தல் சூழல் உருவாக்கப்பட வேண்டும் -அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் கருத்து
- முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்றது.
- சீனி.திருமால்முருகன் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்.
மத்தூர் ,
மாநில கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனரு மான சீனி.திருமால்முருகன் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்.
அவர் கூறியதாவது:-
ஐந்து கோடி குழந்தைகளுக்கு மேல் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்திய இளைஞர்கள் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் படிக்கிறார்கள்.
ஏறத்தாழ ஒரு கோடி பள்ளி ஆசிரியர்கள் 15 லட்சம் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள். இவைகளை நிர்வகிக்க, 60 வருடத்துக்கு முன் சுதந்திர இந்தியாவால் உருவாக் கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு, பள்ளி தேர்வு வாரியங்கள், மத்திய, மாநில அரசு நிர்வாக அமைப்புகள் உதவாது.
இன்று உலகமயமாக் கப்பட்ட சமூக சூழலை கருத்தில் கொண்டு புதிய கற்றல், கற்பித்தல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். தேசிய கல்வி கொள்கையில் சிக்கல்கள் இருக்கலாம், மறுப்பதற்கில்லை.
இதன் சில நல்ல ஆலோசனைகளை சந்தை நோக்கம் கொண்ட சுயநல சக்திகள் முடக்க முயற்சி செய்கின்றன. அதனால் இதனை நடைமுறைபடுத்த தேவைப்படும் சட்டங்கள் இயற்றுவதற்கு பல வருடங்கள் ஆகலாம்.
ஆனால் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல் கால வகையினானே" என்ற பவநந்தி முனிவரின் நன்னூல் சூத்திரத்தை பின்பற்றி தமிழகம் இந்த தேசிய கல்வி கொள்கையில் உள்ள பயனுள்ள கருத்துக்களை தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை சீர்திருத்த, தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த பரிசீலிக்கலாமே, அல்லது நம் மாநில கல்வி கொள்கையில் சேர்க்கலாமே?
இவ்வாறு அவர் பேசினார்.