என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை
- டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
கோவை,
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து கல்லூரி மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இதில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே புழங்கும் போதைப் பொருள்களையும், விற்பவர்களையும் கட்டுப்படுத்த வருங்காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்லூரி நிர்வாகம் மாணவர்களைக் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான வாட்ஸ்-அப் குழுக்களை தொடங்க வேண்டும். அத்துடன் மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப்பொருள் உபயோகத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும்.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மறுவாழ்வு மையங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.