என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதை படத்தில் காணலாம்.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மேற்கூரை

- பஸ் நிலையத்தின் நடைமேடையில் மேற்கூரை சிமெண்ட் தளம் திடீரென பெயர்ந்து விழுந்தது.
- பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக மேற்கூறையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பிற மாநிலங்களின் பெருநகரங்களுக்கும் திண்டுக்கல் வழியாக பஸ்கள் செல்கின்றன.
இதுதவிர திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன்மூலம் உள்ளூர், வெளியூர் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பஸ் நிலையத்தில் குவிகின்றனர். இதனால் இரவு, பகல் என்று 24 மணி நேரமும் திண்டுக்கல் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தேனி, கம்பம் மற்றும் நத்தம் பேருந்துகள் நிற்கும் நடைமேடை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நடைமேடையில் பெண்கள், முதியவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். இந்த நிலையில் பஸ் நிலையத்தின் நடைமேடையில் மேற்கூரை சிமெண்ட் தளம் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேற்கூரை எந்த நேரத்திலும் பயணிகளின் தலையை பதம் பார்க்கும் சூழ்நிலையில் உள்ளது.
இதுகுறித்து கடைக்காரர் கூறுகையில், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோந்து வந்த போலீசாரின் தலையில் பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் காயம் ஏற்படவில்லை. ஆகவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக மேற்கூறையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.