என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேவை குறைந்ததால் திண்டுக்கல் பூமார்க்கெட் விற்பனையின்றி வெறிச்சோடியது
- பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்தது மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது காரணமாக இன்று பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பறிக்கப்படும் பல்வேறு விதமான பூக்கள் திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உச்சத்தில் இருந்தது. இதனால் திண்டுக்கல் பூமார்க்கெட் எப்போதும் கூட்டமாக காணப்பட்டது.
தற்போது பூக்களின் தேவை குறைந்துள்ளதால் திண்டுக்கல் பூமார்க்கெட் விற்பனையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நேற்றுவரை ரூ. 3,500க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று கிலோ ரூ. 600க்கு விற்பனையானது. அதேபோல் ரூ. 300க்கு விற்ற சம்பங்கி ரூ. 30க்கும், முல்லை ரூ.150, கனகாம்பரம் ரூ.200, ஜாதி பூ ரூ.250, கோழிகொண்டை ரூ.20 அரளி ரூ.20க்கும் விற்பனையானது.
இது குறித்து வியாபாரி போஸ் கூறுகையில்,
கடந்த 2 நாட்களாக முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.3,500 வரை விற்கப்பட்டது. பூ மார்க்கெட்டிற்கு 30 டன் வரை பூக்கள் வரத்து வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்தது மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது காரணமாக இன்று பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2 டன் பூக்கள் வரத்து வந்துள்ளது. 10 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.