என் மலர்
உள்ளூர் செய்திகள்
தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி
- லண்டனில் டி.டி.வி. தினகரனுக்கு சொத்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறினர்.
- அ.தி.மு.க. இன்று வலுவான கட்சியாக உள்ளது.
ஓமலூர் :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை (இன்று) அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். அ.தி.மு.க. இன்று வலுவான கட்சியாக உள்ளது. இதனை ஜீரணிக்க முடியாத ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில், மாநாடு நடத்த போவதாக கூறுகிறார். பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.
சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசுவது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நாங்கள் பேசுவது துண்டிக்கப்படுகிறது. நாங்கள் பேசுவதையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பலமுறை கூறிவிட்டோம். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார் என்று கேட்கிறீர்கள். அவர் சொத்து பட்டியலை தான் வெளியிட்டு இருக்கிறார். அதனை செய்திதாள்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். தி.மு.க. சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறி இருக்கிறார். லண்டனில் டி.டி.வி. தினகரனுக்கு சொத்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறினர். முதலில் அந்த சொத்து பட்டியலைதான் வெளியிட வேண்டும்.
அண்ணாமலை பேட்டி கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்தி பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார். அவரை பற்றி என்னிடம் தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள். ஒரு முதிர்ந்த அரசியல்வாதியை பற்றி கேள்வி கேளுங்கள். நான் பதில் கூறுகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னதாக ஓமலூர் அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மணி எம்.எல்.ஏ. வரவேற்றார். அமைப்பு செயலாளர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது உறுப்பினர் சேர்க்கையின் போது ஒவ்வொருவரின் முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்றும், கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மணி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.