என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

- கை, கால், முகத்தை டேப்பால் கட்டி கொடூரமாக கொன்றுள்ளனர்.
- 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி(வயது82).
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.
இதையடுத்து சரோஜினி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது மகன்கள் 2 பேரும் வந்து தாயை பார்த்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு பால் பாக்கெட் போடுபவர் காலையிலேயே போட்டு சென்று விட்டார். ஆனால் 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.
இதனால் அக்கம்பக்க த்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி இறந்த நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது அவரது கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்டிரு ந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை. இதனால் மர்மநபர்கள் யாரோ இவர் தனியாக இருப்பதை அறிந்து, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு வீட்டில் ஏதாவது தடயங்கள் உள்ளதா? என தேடி பார்த்தனர்.
மேலும் அவரை கொலை செய்தது யார்? நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா எனவும் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே மூதாட்டியின் வீட்டில் 3 பேர் வாடகைக்கு இருந்ததாகவும், அவர்களை காலை முதல் காணவில்லை என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனால் அந்த நபர்கள் மூதாட்டியை கொன்று விட்டு, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாமோ என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கோணத்தி லும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.