search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுத் தொடர் ஓட்டம்
    X

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுத் தொடர் ஓட்டம்

    • ஈரோட்டில் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியின் மாதிரிச்சுடர் ஏந்தி, தொடர் ஓட்டம் நடைபெற்றது.
    • ஈரோடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இப்போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியின் மாதிரிச் சுடர் ஏந்தி, தொடர் ஓட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

    இந்தத் தொடர் ஓட்ட நிகழ்ச்சியை, கலெக்டர் அலுவலக வளாகத்தில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில், ஈரோடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வுத் தொடர் ஓட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை சந்திப்பு, பிரப் சாலை, பன்னீர் செல்வம் பூங்கா சென்று, மீண்டும் பிரப் சாலை வழியாக அரசு மருத்துவமனை சந்திப்பு, மேட்டூர் சாலை வழியாக வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, எம்.எல்.ஏ. வெங்கடாசலம், துணை மேயர் செல்வராஜ் மற்றும் விளையாட்டுத் துறையினர் கலந்துகொண்டனர்.

    பின்னர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில் எப்போதும் நடைபெறாது அளவு 44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது சுமார் 188 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    இது ஒட்டுமொத்த விளையாட்டு துறையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சுமார் 40 ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

    எனவே ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் சிந்தடிக் ஓடு தளம் அமைக்கும் திட்டம் அங்கு மாற்றப்படுகிறது. உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது என்று ஏற்கனவே மின்துறை அமைச்சர் விளக்கியுள்ளார். தமிழகத்தின் நிதிநிலை எந்த அளவு உள்ளது என்று மக்களுக்கே தெரியும்.

    அதனால் தான் வீட்டு வரி கூட உயர்த்தப்பட்டது. ஈரோடு நகரில் குடிநீர் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வருவதாக புகார் கூறப்பட்டாலும் இதற்கு காரணம் முன்பிருந்த அ.தி.மு.க. அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவைகளை முறையாக அ.தி.மு.க. அரசு ஈரோட்டில் செயல்படுத்தவில்லை.

    இது குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்கிறோம் .பாதாள சாக்கடை திட்டத்தில் கூட பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதையெல்லாம் நாங்கள் சரி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×