என் மலர்
ஈரோடு
- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அந்தியூர் நிர்வாகிகளுக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் புகார் கூறியதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, புகார் கூறியவரை செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துப் பேசியதாக கூறப்படும் நிலையில், திட்டமிட்டு மோதல் உருவாக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
- செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்ற நிலையில் சென்ற ஆண்டு கோவில் மாசி மாத திருவிழா நடைபெறவில்லை.
கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா பூச்சாட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடந்தது. இதில் பவானி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவறைக்கு சென்று பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் தாங்களே அபிஷேகம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரான செல்லியாண்டியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவிய ங்களால் மூலவருக்கு ஊற்றி விடிய விடிய சுமார் 15 மணி நேரத்தக்கும் மேலாக பக்தர்களே அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை யம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது.
மேளதாளங்கள் முழங்கள் குதிரைகளுடன் புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு ரோடுகள் வழியாக சக்தி அழைத்து வரப்பட்டது.
இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை காசுகள் என பல்வேறு பொருட்களை வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் சூறை வீசப்பட்டது. இதை பக்தர்கள் பலர் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தும், பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் சேறு பூசிக் கொண்டு நோய் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மேலும் இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர். பலர் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு தாயே செல்லாண்டியம்மா என பக்தி கோஷம் முழங்க மேளதாளங்களுக்கு ஏற்ற வகையில் ஆடிக் கொண்டே வந்தனர்.
இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மதியம் பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, அக்னி சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படு கிறது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
- தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.
- இன்று காலை 10:15 மணிக்கு பிளஸ்-2 பொது த்தேர்வு தொடங்கியது.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 108 தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 71 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 1, 267 என மொத்தம் 24,338 மாணவ மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
இன்று காலை 10:15 மணிக்கு பிளஸ்-2 பொது த்தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வை மாணவ மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில் தேர்வை பார்வையிடுவதற்காக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது தனி தேர்வு எழுதும் 3 மாணவிகள் அந்த தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். ஆனால் இந்த மாணவிகள் பதற்றத்தில் ஹால் டிக்கெட்டை எடுத்து வர மறந்து விட்டனர். மேலும் அவர்கள் தேர்வு மையம் தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்ததும் தெரிய வந்தது.
அவர்கள் தவறுதலாக பன்னீர்செல்வம் பார்கில் உள்ள அரசு பெண்கள் தேர்வு மையத்திற்கு வந்ததும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவ் அந்த மாணவிகளிடம் பேசி பதற்றப்பட வேண்டாம். இங்கே உங்களுக்கு ஹால் டிக்கெட் எடுத்து தருகிறேன் என்று கூறி பள்ளி அலுவலகத்தில் உள்ள கணினி மூலம் அந்த 3 மாணவிகளுக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து எடுத்து அவர்களிடம் வழங்கினார்.
மேலும் தனது கார் மூலமாக அந்த 3 மாணவிகளையும் தேர்வு மையமான தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவினார். அந்த 3 மாணவிகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
- கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
- விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.
தமிழக கர்நாடக எல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிந்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பனி பொழிந்தாலும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே 95 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.
எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரி மாதத்திலேயே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.
பல்வேறு நகரங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கு ஏற்றார் போல் ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் மத்தியிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுவரை 95 டிகிரி செல்சியஸ் பதிவாகி வந்த நிலையில் நேற்று தமிழகத்தில் முதல்முறையாக கோடை வெயில் தொட ங்கும் முன்பே ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக எப்போது பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டுச்சிலை, ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்ற பகுதிகளில் மதிய நேரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர்.
இதேப்போல் மோர், இளநீர் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேலைக்கு செல்லும் இளம்பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் குடைகளை பிடித்த படியும், முகத்தை துணியால் முடியும் செல்வதை காண முடிகிறது.
கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியதால் ஈரோடு மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இன்னும் போக போக வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என அச்சத்தில் உள்ளனர்.
- பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன்.
- நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்.
அப்போது செங்கோட்டையன் பேசும் போது,
அ.தி.மு.க ஒரு அசைக்க முடியாத இயக்கமாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி வரும். இதனால் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மீண்டும் செய்து தர முடியும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த ஆட்சியில் எந்த ஒரு நன்மையும் நடைபெறவில்லை. 2026 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றார்.
இதைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அப்போது நிருபர்கள் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஏன்? பங்கேற்கவில்லை என கேட்டனர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், நினைவு நாளாக இருந்திருந்தால் நான் சென்னை சென்று இருப்பேன். பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர உதவிகரமாக இருக்கும் என்றார்.
வெள்ளாடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து செங்கோட்டையன் கிளம்பிச் சென்றார்.
- கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.
- கடந்த 2 மாத காலமாக இப்பகுதியில் ஒரு காட்டுயானை பகல் மற்றும் இரவு நேரத்தில் உலா வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி உகினியம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.
இதற்கிடையே கடந்த 2 மாத காலமாக இப்பகுதியில் ஒரு காட்டுயானை பகல் மற்றும் இரவு நேரத்தில் உலா வருகிறது. கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராம மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. பொங்கலன்று விவசாய பயிருக்கு காவல் பணியில் இருந்த விவசாய ஒருவரை யானை தாக்கிக்கொண்டது.
இந்நிலையில் மீண்டும் உகினியம் கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானை உகினியம் அரசு நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை 2 இடங்களில் இடித்து சேதப்படுத்தியதோடு பள்ளியில் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
நல்ல வாய்ப்பாக இரவு நேரம் யானை வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் கேட் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-
உகினியம் மலை கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றைக்காட்டு யானை புகுந்து மக்களை அச்சுறுத்தி, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது அரசு பள்ளி பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சுற்றுச்சுவரையும், கேட்டையும் இடித்து சேதப்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் சுற்றி திரியும் காட்டுயானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஈரோடு, 46 புதுவை சேர்ந்த தண்டபாணி (55) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் தண்டபாணி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் தண்டபாணியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பெரியார் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இரவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அசோகபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, உன் பெரியார் வெங்காயம் வைத்துள்ளார். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்.
நீ வெங்காயத்தை வீசு. நான் வெடிகுண்டு வீசுகிறேன் என்று பேசினார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் போலீசார் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று இது குறித்து சம்மன் அளித்தனர். அதில் வியாழக்கிழமை (இன்று) கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சீமான் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் நன்மாறன் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரி விஜயனிடம் சீமானின் கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதத்தில், ஏற்கனவே தமிழகம் முழுவதும் தொடரப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரணை செய்ய வேண்டுமென காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்திருப்பதாகவும், அந்த மனு மீது முடிவெடுத்து அறிவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை அதிகாரி விஜயன் பெற்றுக் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதுகுறித்து சீமான் வக்கீல் நன்மாறன் நிருபர்களிடம் கூறும்போது, புகார் கொடுத்தவர் யார்? எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இது மட்டுமின்றி சீமான் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். உரிய உத்தரவு கிடைக்க பெற்றவுடன் விசாரணைக்கு சீமான் ஆஜராவார் என்றும் கூறினார்.
- சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
- பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'இது பெரியார் மண்' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.
பெரியாரை கொச்சைப்படுத்தி கல் எறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என நாம் தமிழர் கட்சி இருக்கிறது என நினைக்கிறேன். சீமான், பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்தால், எதிர்வினை ஆற்ற எங்களால் முடியும்.
பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்வது ஏன்?. ஈனபையன் சீமான் பெரியார் பற்றி தவறாக பேசுகிறார். எங்கே சோறு கிடைக்கும் என்று பா.ஜ.க தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
திராவிட இயக்கத்தை ஏன் பா.ஜ.க குறி வைக்கிறது என்றால், பெரியார் திராவிட இயக்கத்தினை முன் வைத்து வழிநடத்திச் செல்வதால் தான். சீமான் திராவிடத்தையும், தமிழ் தேசியம் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா? திராவிடம் என்றால் தாலாட்டு குழந்தை போன்று தெரிகிறதா?.
சீமான், ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.400 கோடியும், பா.ஜ.க.விடம் இருந்து ரூ.300 கோடியும் வாங்கினார். தானே பேசி தானே சிரிக்கும் பழக்கம் சீமானிடம் உள்ளது. பெரியார் பற்றி கொச்சையாக சொன்னதற்கு சீமானிடம் ஆதாரம் இருக்கிறதா?
பிரபாகரனை சீமான் சந்தித்தாராம்? சந்தித்தவர்கள் யாரும் சொல்லவில்லை. உலகத்தில் நிகரற்ற வீரன் நேற்றும், இன்றும், நாளையும் பிரபாகரன் தான்.
சீமான் பா.ஜ.க.வின் கைக்கூலி, அடியாள் என 10 வருடமாக சொல்லி வருகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது. கட்சியின் இறுதி ஊர்வலம் ஈரோட்டில் தான் நடக்கும்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையே இறக்குமதி செய்யப்பட்டவர் தான். ஆனால் எப்போது அவர் ஏற்றுமதி செய்யப்படுவார் என்று அந்த கட்சியில் இருப்பவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
முருகனை வைத்து சீமான் அரசியல் செய்யலாம் என்று பார்க்கிறார். ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று சொல்லும் அண்ணாமலை, எப்போது ஆட்சிக்கு வருவார்கள் என அவரே சொல்லட்டும்.
கூவம் பாவத்தை போக்கினால் போக்கும், நத்தை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறும். ஆனால், பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது. பா.ஜ.க.விற்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது, கிடைக்க விடமாட்டோம்.
அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினாலும், பயப்பட மாட்டோம். பெரியார் கொள்கை மீட்டெடுக்க சாவக்கூட தயார். 100 ஆண்டுகள் கடந்தும் பெரியார் வாழ்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விவசாயிகளுக்கு தேங்காய் விலை கட்டுப்படியாகவில்லை.
- தொகுப்பு வீடுகளில் அரசு ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது.
கோபி:
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திஷா கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் தலைமையில் நடந்த திஷா கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினேன். விவசாயிகளுக்கு தேங்காய் விலை கட்டுப்படியாகவில்லை. அதனால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலமாக கொள்முதல் செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்று வலியுறுத்தி பேசினேன்.
மேலும் கோபியில் புற வழிச்சாலை அமைப்பதற்கும், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் தொல்லை அனுபவித்து வருகின்றனர். காட்டுப்பன்றியை சுடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், தொகுப்பு வீடுகளில் அரசு ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது. அதை அதிகப்படுத்தி தர வேண்டும்.
இன்னும் பல கோரிக்கைகள் வலியுறுத்தி கூட்டத்தில் பேசி வந்தேன். எனக்கு அழைப்பு வந்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மக்களுக்காக பணி செய்வதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார்.
- போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார்.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். செல்வம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோடு கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மகளுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் மற்றொரு நபரிடம் பழகி வந்துள்ளார். அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்துடன் கூறியுள்ளார்.
இதற்கு செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார். இதனால் போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வம் வந்தார்.
அப்போது திடீரென தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட் ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் செல்வத்திடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் அவரது பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.