என் மலர்
உள்ளூர் செய்திகள்
400 கோடிக்கு 4 ஆயிரம் கோடி வசூலித்துவிட்ட பிறகும் கிருஷ்ணகிரி சுங்க சாவடி அகற்றப்படாதது ஏன்? -அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் கேள்வி
- கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
- கிரஷர் லாரிகளை கொரட்டகிரி சாலை வழியாக செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிரஸர் ஓனர்ஸ் பெடரேஷன் அமைப்பினர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெ.காருப்பள்ளி - தேன்கனிக்கோட்டை சாலையில், 5-க்கும் மேற்பட்ட ஜல்லி கிரஷர் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இங்கு, 1,500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இப்பகுதியிலிருந்து வரும் கிரஷர் லாரிகளை கொரட்டகிரி சாலை வழியாக செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கிரஷர் யூனிட் உரிமையாளர்கள் போட்ட சாலையில் செல்லக்கூடாது என கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதேபோல, 2005, பிப்ரவரி 9-ந் தேதி அமைக்கப்பட்ட கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி யில் பகல் கொள்ளை நடக்கிறது. தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகளில், 22 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக தமிழக அரசு உறுதியளித்த நிலையில் செயல்படுத்தவில்லை.
சேலம்- சென்னை ஆறுவழிச்சாலை, 20 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் அதை தமிழக அரசு தடுக்கும் போது, சுங்கச்சாவடிகளை அகற்ற ஏன் நடவடிக்கை இல்லை.
கிருஷ்ணகிரி சுங்கச்சா வடிக்கு வசூலாக வேண்டிய, 400 கோடி ரூபாய்க்கு, 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட நிலையிலும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும். பா. ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.