என் மலர்
உள்ளூர் செய்திகள்
வத்தலக்குண்டுவில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
- வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
- வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே உள்ள ஆடுசாபட்டியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து நெல்மணிகளை அறுவடை செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வெகுதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி தவசி செல்வம் அவருக்கு சொந்தமான வயல் ஆடுசாபட்டியில் 100 ஏக்கரில் உள்ளது. அங்கு நெல் பயிரிட்டு விவசாயம் செய்து தற்போது அறுவடை செய்து நெல் மணிகளை குவியல் குவியலாக குவித்து வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கமே நேரடி நெல் கொள்முதல் செய்கிறது.
இந்த நேரடி கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தையை விட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்பினார்கள். தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் விவசாயிகள் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மணிகளை விற்பனை செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது ஆடுசாபட்டியிலிருந்து விராலிப்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி, நிலக்கோட்டை, ராமராஜபுரத்திற்கு எடுத்து செல்வதற்கு வண்டி வாடகை ஏற்றுக் கூலி, இறக்கு கூலிக்கு அதிகமாக செலவு செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே வத்தலகுண்டு பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு செலவுத்தொகை குறைந்து அதிக லாபம் கிடைக்கும் என்றார்.
ஆடுசாபட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு மஞ்சள் ஆற்றில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழியாக கொடுக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட் வாய்க்கால் அமைத்துக் கொடுத்தால் தண்ணீர் வீணாகாமல் முழுவதும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அமைச்சர் இ. பெரியசாமி விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறினார்.