என் மலர்
உள்ளூர் செய்திகள்
பிசான சாகுபடிக்கு விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் - துணை இயக்குனர் தகவல்
- நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிசான பருவத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் பயிரிட விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர்.
- விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் விவசாயிகள் கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிசான பருவத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் பயிரிட விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் விவசாயிகள் கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை ரசீது பெற்று விதைகள் வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், விற்பனையாளர் கையொப்பம் முதலிய விபரங்கள் இருக்க வேண்டும்.
விதைச் சிப்பத்தில் உள்ள விபர அட்டையில் குறிப்பிடப்பட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து பின் வாங்க வேண்டும். நெல் மற்றும் உளுந்து பயிர்களில் விதைச்சான்று மற்றும் அங்கச்சான்றுத் துறையின் சான்றட்டை பொருத்திய விதைகளை வாங்குவது சிறந்தது.
விவசாயிகள் தங்களிடம் உள்ள சொந்த நெல் மற்றும் உளுந்து விதைகளை பயன்படுத்தும் முன்னர் மேற்படி விதைகளின் மாதிரிகளை நெல்லை விதை பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு கட்டணம் ரூ.80 செலுத்தி முளைப்புத் திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விதை விற்பனை நிலையங்களுக்கு தற்போது வரப்பெற்றுள்ளது. திருவேங்கடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 14 விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பதிவுச் சான்று மற்றும் முளைப்புத் திறன் பரிசோதனை அறிக்கை பெறப்படாத 3355 கிலோ மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதை குவியல்கள் மதிப்பு ரூ.12,19,000 விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து விதை குவியல்களிலும் விதை மாதிரி எடுக்கப்பட்டு, முளைப்புத் திறன் பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.