என் மலர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் விதைப்பிற்கு தரமான விதைகளை பயன்படுத்திட வேண்டும்
- விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
- விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
விவசாயிகள் தரமான விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்திட வேண்டும் என விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். தரமான விதைகள் என்பது சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும். சான்று விதை என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்திற்குள் புறத்தூய்மை, முளைப்புத் திறன், ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும். புறத்தூய்மை பரிசோதனையில் தூய விதை, பிற தானிய விதை உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகிய நான்கு இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
விதைக்கப்படும் விதையில் பிற தானிய விதை, உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் விதைப் தூய்மையானதாக இருக்கும். அதனால் விதையின் தரம் உயர்கிறது. விதையில் பிற பயிர் விதை மற்றும் களை விதை இருந்தால் நல்ல விதையுடன், அவையும் முளைத்து பயிருடன் சேர்ந்து வளர்ந்து பயிருக்கு இடப்படும் உரம் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை எடுத்து வளரும். அதனால் நாம் பயிருக்கு இடும் உரம் மற்றும் பூச்சி மருந்து வீணாவதுடன், பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறைகிறது. கல், மண், பயிரின் இதர பகுதிகளான வேர், தண்டு, இலை, உடைந்த விதை ஆகியவை உயிரற்ற பொருட்கள் இனத்தில் சேரும். உயிரற்ற பொருட்கள் மிகவும் குறைவாக இருக்கும்.
புறந்தூய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளான முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவை கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் செய்து தரப்படுகிறது. அதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து விதை மற்றும் ரகம், பெயர், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்புக் கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 என்ற விகிதத்தில், வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தாங்கள் அனுப்பிய விதை மாதிரிகளின் விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.