என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாதம் ரூ.50 ஆயிரம் வட்டி தருவதாக நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி
- மேகநாதன் மூலம் தலைமறைவாக இருந்த சிவசங்கரையும் போலீசார் நேற்று மாலை பிடித்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவசங்கர் விட்டு விட்டு சென்ற தொழிலை மேகநாதன் தொடர்ந்து செய்து வந்தபோது தனிப்படை போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.
வண்டலூர்:
சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம், ரோகிணி நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் அபுதாகிர் (36) இவர் செங்கல்பட்டில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு பகுதி சேர்ந்த சிவசங்கர், அவரது மனைவி பெர்னா, சிவசங்கரின் தந்தை சம்பத் மற்றும் அவரது நண்பர் மேகநாதன் ஆகியோர் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் பலரிடம் மாதம் 50,000 வட்டி தருவதாகவும், இதனால் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
இதனை நம்பிய அபுதாகீர் அவரது அக்கா, தங்கை, தம்பி, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் நகை, பணம் ஆகியவற்றை வாங்கி சிவசங்கரிடம் ரூ.5 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்துள்ளார். இதில் தொடர்ச்சியாக 4 மாதம் தலா ரூ.50 ஆயிரம் என அபுதாகீரிடம் சிவசங்கர் வட்டி கொடுத்துள்ளார்.
இதனால் சிவசங்கர் மீது அபுதாகீருக்கு மேலும் நம்பிக்கை ஏற்படவே நிதி நிறுவனத்தில் அக்கம்பக்கத்தினரையும் சேர்த்து விட்டுள்ளார்.
இதனையடுத்து அடுத்த சில மாதங்களில் சிவசங்கரின் போன் சுவிட்ச் ஆப் என வந்ததால் அதிர்ச்சி அடைந்த அபுதாகிர் சிவசங்கரை தேடி அலைந்து திரிந்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அபுதாகிர் சிவசங்கரின் வீட்டு முகவரி கண்டுபிடித்து அவரது மனைவி பெர்னாவிடம் சென்று கேட்டதற்கு, எனது கணவரை காணவில்லை என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ந் தேதி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் துறையினர் எனது கணவரின் புகைப்படத்துடன் காவல் நிலையத்தில் நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அபுதாகிர் கடந்த மாதம் 23-ந்தேதி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவசங்கரின் நண்பர் மேகநாதனை நேற்று காலை பிடித்து வந்து விசாரித்தனர். இதனை அடுத்து மேகநாதன் மூலம் தலைமறைவாக இருந்த சிவசங்கரையும் போலீசார் நேற்று மாலை பிடித்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விலை உயர்ந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரப்பாக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி மாதம் ரூ.50 ஆயிரம் வட்டி தருவதாக கூறி பல கோடி சுருட்டிய மோசடி கும்பல் மீது செங்கல்பட்டு காவல் நிலையங்களில் இதுபோன்று 13 புகார்கள் உள்ளது என்றும், இதில் கோடி கணக்கில் சுருட்டிய பணத்தை மேகநாதனிடம் கொடுத்துவிட்டு சிவசங்கர் தலைமறைவானதும், அந்த பணத்தில் செங்கல்பட்டு பகுதியில் தலா ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வீடுகள் வாங்கி போட்டதும், ரூ.21 லட்சத்தில் விலை உயர்ந்த கார் ஒன்று வாங்கியதும், இதில் சிவசங்கர் விட்டு விட்டு சென்ற தொழிலை மேகநாதன் தொடர்ந்து செய்து வந்தபோது தனிப்படை போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.
இதில் சுமார் ரூ.4½ கோடி வரை மோசடி செய்த சிவசங்கரை செய்யாரில் தலைமறைவாக இருந்தபோது மேகநாதன் மூலம் பிடிபட்டதும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.