என் மலர்
உள்ளூர் செய்திகள்
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
- 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன.
- சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பலவகை பறவைகள் வருகை தந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கும்.
பின்னர் குடும்பத்துடன் பறவைகள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர்களை தாண்டி பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.
வழக்கமாக வடகிழக்கு மழைக்குப் பின்னர் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பறவைகளின் வருகை தொடங்கி 6 மாதங்கள் வரை இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ந்து அவ்வப்போது பெய்து வருகிறது.
இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்திற்கு வரத்தொடங்கி உள்ளன.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை பாகிஸ்தான், சைபீரியா, பங்களாதேஷ், பர்மா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைகுத்தி நாரை, கூழைக்கிடா, பாம்புதாரா, கரண்டி வாயன், தட்டைவாயன், நீர்காகம், முக்குளிப்பான், வக்கா மற்றும் வாத்து இனங்கள் உள்ளிட்ட 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன. அவை சரணாலயத்தில் உள்ள மரங்களின் மீது கூட்டம் கூட்டமாக இருப்பது பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இதுவரை 15 ஆயிரம் பறவைகள் வந்திருப்பதாகவும், அவை ஏரியில் உள்ள மரங்களில் முட்டையிட்டு கூடுகள் கட்டி வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரணாலயத்தில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, கேமராவுக்கு ரூ.50, செல்போன் கேமராக்களுக்கு ரூ50, மற்றும் வீடியோ கேமராவுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சீசன் தொடங்கி உள்ளதால் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.