என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.1 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
- 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக வெளிமாநில மது விற்பனை நடந்து வந்தது.இதனை கண்காணித்து மது குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம், கீழையூர் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஆனந்தம் நகரில் ஆரோக்கிய மேரி என்பவரது வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டுக்கு வந்த டாஸ்மார்க் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பி ஓடினார்.
தொடர்ந்து காலணி வீட்டில் 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுவை மாநில 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சரக்கு வாகனம் மூலம் கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்களை நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ள நிலையில் தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.