என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் தொடர் மழையால் கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத்தீ; வனத்துறையினர் நிம்மதி!
- ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
- காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு பசுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான அரியவகை மூலிகை செடிகள், வானுயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் யானை, காட்டெருமை, காட்டுபன்றி, முயல், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மார்ச் மாத தொடக்கத்தில் பனியின் தாக்கம் குறைந்து வெப்பம் அதிகரித்தது.
இதனால் வனப்பகுதிகளில் வறண்ட நிலையே காணப்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில் சிக்கி ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகளும் இடம் பெயர்ந்து பாதிப்புக்குள்ளானது.
வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகளும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். எனவே வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடினர். ஒரு இடத்தில் அணைத்தால் மற்றொரு இடத்தில் பற்றி சேதத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தபோதும் போதுமான கருவிகள் இல்லாததால் காட்டுத்தீ பற்றும் சமயங்களில் வனத்துறையினர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு பசுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய வனத்துறையினர் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.