என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாமை எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இலவச கண் சிகிச்சை- சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்
- ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.
- முடிவில் மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்–பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை சீனிவாசபுரம் காமராஜர் ரோட்டில் உள்ள லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலரும் லயன்ஸ் சங்க நிர்வாகியுமான தமிழ்வாணன், லயன்ஸ் சங்கம் மலேசியா சுந்தரம் ஜுவல்லரி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண் சிகிச்சை முகாமை முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நல்லெண்ணத்தூதுவர் முகமது ரபி தொடங்கி வைத்தார்.லயன் சங்க நிர்வாகிகள் சிவகுமார், பாலமுருககுப்தா, பார்க்கவன் பச்சமுத்து, தலைமை கண் மருத்துவர் ஞான செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி., பேசியதாவது:-
இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்ததற்கு பெருமைப்படுகிறேன். அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.
இதேபோல் சர்க்கரை நோய்க்கும் ஆரம்பத்திலே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
முகாம் நடைபெறும் சீனிவாசபுரம் லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு 2 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க உள்ளேன். வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க உள்ளது.
விடுமுறை காலத்திற்குள் அந்த பணி நிறைவடையும். புதிய கட்டிடங்களுக்கு தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து வகையான பர்னிச்சர்களையும் காவேரி லயன் சங்கம் உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு லயன் சங்கங்களும் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பரிசோதனை முகாம் மாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பரிசோதனை முடிவில் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன், செயலர் சிவ சண்முகசுந்தரம், செயலர் (சேவை) ராதாகிருஷ்ணன், பொருளாளர் மனோகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.