என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
- 2,397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
- கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட இயலாது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 2,397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கூறியதாவது:-
பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2022-2023 - ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மி.க. அடி வீதம் 23.12.2022 முதல் 06.05.2023 வரை மொத்தம் 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி வீதம் என மொத்தம் வினாடிக்கு 70 கனஅடி வீதம் மூன்று நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், நான்கு நாட்கள் மதகை மூடி வைத்தும் இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 கிராமங்களைச் சார்ந்த நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் 1,583 ஏக்கர் நிலமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறை யினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
மேலும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) குமார், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையத் ஜாகீருதின், நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தமூர்த்தி, தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி, சண்முகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.