என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரோடு ரோலரையே லாரியில் தூக்கி கடத்தி சென்ற கும்பல்
- சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.
- கேமராவில் ஆய்வு செய்தபோது ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
பொன்னேரி:
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன். சாலை ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மீஞ்சூர் பகுதியில் நடைபெற்ற சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் பணிகள் முடிந்த நிலையில் அந்த ரோடு ரோலரை சென்னைக்கு கொண்டு வருவதற்காக ஓட்டிவந்தனர். சோழவரம் சுங்கச்சாவடி அருகே செல்லும், ரோடு ரோலர் பழுதானது. தொடர்ந்து இயக்க முடியாததால் அந்த ரோடு ரோலரை டிரைவர் அங்கேயே விட்டுவிட்டு சென்றார்.
இந்த நிலையில் கடந்த, 24-ந்தேதி ரோடுரோலரை சரிசெய்து எடுத்து செல்வதற்காக என்ஜினீயர் தினகரன் ஊழியர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ரோடு ரோலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது லாரி ஒன்றில், ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து லாரியின் பதிவு எண்ணை வைத்து ரோடு ரோலரையே திருடி சென்ற திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், கோபிநாத், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சாலையோரம் நீண்ட நாட்களாக ரோடு ரோலர் கேட்பாரற்று நின்றதால் கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருடி சென்றதாக தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரோடு ரோலர், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.