search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்புத் திட்டம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
    X

    காவிரி டெல்டா பகுதி

    காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்புத் திட்டம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    • குறுகிய கால நெல் ரகச் சான்று விதைகள் 50 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்ய நிதி ஒதுக்கீடு
    • உரங்கள் முழு மானியத்தில் 1,90,000 ஏக்கர் பரப்பளவிற்கு வழங்கப்படும்.

    ரூ.61.1295 கோடி நிதியில் குறுவை தொகுப்புத் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை நடப்பாண்டில் முன்னரே துவங்கி, விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் கடந்த மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையினை திறந்தார்கள்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964.11 கிமீ நீளத்திற்கு தூர்வாரும் பணியை மேற்கொள்வதற்காக 08.04.2022 அன்றே ரூ.80 கோடி நிதியினை ஒப்பளிப்பு செய்து, காலத்தே தூர்வாரப்பட்டதால், தற்போது காவேரி நதி நீர் கடைமடை வரைக்கும் சென்றுள்ளது.

    நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடிப் பரப்பினை 5.2 இலட்சம் ஏக்கருக்கும் மேல் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், முதலமைச்சர் கடந்த 31.05.2022 அன்று ரூ.61 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.

    அதன்படி, தமிழ்நாடு அரசு ரூ.61.1295 கோடி நிதியில் குறுவை தொகுப்புத் திட்டத்திற்கான ஆணையினை வெளியிட்டுள்ளது. அரசாணையின்படி, குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ், வழங்கப்படும் மானிய விபரங்கள் பின்வருமாறு:

    முழு மானியத்தில் இரசாயன உரங்கள்: குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, ஏக்கருக்கு ரூ.2466.50 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் உரங்கள் முழு மானியத்தில் 1,90,000 ஏக்கர் பரப்பளவிற்கு வழங்கப்படும்.

    இதற்காக அரசுக்கு ரூ.46.8635 கோடி நிதி செலவாகும். விவசாயிகள் இரசாயன உரங்களை வேளாண்மைத் துறையின் பரிந்துரையுடன் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளும் வகையில் போதுமான உரங்களை இருப்பு வைத்து விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    குறுவை நெல் இரக விதைகளுக்கு 50 சதவிகித மானியம்: அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான 2400 மெட்ரிக் டன் குறுகிய கால நெல்ரகச் சான்று விதைகள் 50 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்வதற்காக ரூ.4.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாற்றுப் பயிர் சாகுபடிக்காக இடுபொருட்கள்: குறுவையில் நெல்லுக்கு மாற்றாக 22,௦௦௦ ஏக்கரில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் பொருட்டு, தரமான விதைகள், உயிரி பூச்சிக்கொல்லி, உயிர் உரங்கள், நடவு, அறுவடை மானியம் மற்றும் நுண்ணூட்ட சத்து உரங்களுக்காக ரூ.3.396கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    காலத்தே வேளாண் பணிகளை மேற்கொள்ள 50 சதவிகித மானியத்தில் 237 பண்ணை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை மூலம் 50 விசை களை எடுக்கும் கருவிகள், 50 விசை உழுவை இயந்திரங்கள், 22 ஒருங்கிணைந்த நெல் அறுவடை இயந்திரங்கள், 60தானியங்கி நாற்று நடவு இயந்திரங்கள், 35 டிராக்டர்கள், 20 வைக்கோல் கட்டும் கருவிகள் ஆக மொத்தம் 237 வேளாண் இயந்திரங்களை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.6.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனுக்காக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த குறுவை தொகுப்புத் திட்டத்தின் மூலம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவேரி டெல்டா பகுதிகளில் முன்கூட்டியே வாய்க்கால்களை தூர்வாரியது, மேட்டூர் அணையை 19 நாட்கள் முன்னதாகவே திறந்தது, ரூ.61.13 கோடியில் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவித்தது போன்ற அரசின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளினால், நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி 5.20 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறுவைத் தொகுப்புத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு, டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் உழவன் செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×