என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் திடீர் 'சஸ்பெண்டு'
- அருண்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
- நகைச்சுவையாளர் மன்றம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதல்மைல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் அருண்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் நகைச்சுவையாளர் மன்றம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.
இந்த நிலையில் இவர் பள்ளியில் முறையாக கற்பித்தல் பணியை மேற்கொள்ளாமலும், கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து வருவதாகவும் அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் ஆளும் கட்சி பெயரை கூறி பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதையறிந்த தொடக்கக் கல்வி அலுவலர், கூடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரைகள் வழங்கியும், எச்சரித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஆசிரியர் அருண்குமாரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அருண்குமார், பள்ளியில் முறையாக கற்பித்தல் பணியை மேற்கொள்ளாமல் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரியிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததாகவும் புகார் வந்தது. அதன் பேரில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளனது.