என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையத்தில் கிராம சபை கூட்டம்: வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் கூச்சல்-குழப்பம்

- ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை தலைமை தாங்கினார்.
- வைப்புத் தொகை கணக்கு குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கலைஞர் நகர் அரசமரம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். பற்றாளராக கேளம்மாள் கலந்து கொண்டார்.
காலை 10.30 மணிக்கு துவங்க வேண்டிய கிராமசபை கூட்டம், 12 மணி வரையில் பற்றாளர் வராததால் பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும், கூட்டத்தில் வார்டு உறுப்பினர் சித்ராவின் கணவர் ராஜு, பூங்கொடியின் கணவர் வெங்கடேசன் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர்கள் பத்மாவதி, பவானி, பாபு, எழிலரசு, நஷீலா ஆகியோர் கூட்டம் துவங்கும் வரையில் வரவில்லை.
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளே கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் அரசு நலத்திட்ட பணிகள் எவ்வாறு முறையாக நடைபெறும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், வைப்புத் தொகை கணக்கு குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் முறையான கணக்குகளை கூறவில்லை. இதனால் கூட்டத்தில் நீண்ட நேரம் கூச்சலும்-குழப்பமும் நிலவியது. இதன் பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் எழுந்து உரிய கணக்குகளை அடுத்த கிராம சபை கூட்டத்தில் சமர்பிப்பதாக கூறினார். இதன் பின்னர், கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றது.